Wednesday, June 22, 2016

குரங்கு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
கவலைகளை விட்டொழியுங்கள்.

1 comment:

  1. Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

    ReplyDelete